திங்கள், 9 மார்ச், 2015

எங்கள் அம்மா எங்கே?


புலவர் கோ.இமயவரம்பன்







(அம்மா அவர்களால் அன்புடன் வளர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் துயரினைச் சித்திரிக்கும் பாடல் இது)



1. எங்கள் அம்மா எங்கே?
எவரும் சொல்ல மாட்டாரோ?
அங்கையில் உணவை அளித்து
ஆயிரம் முத்தங்கள் அளிக்கும்
(எங்கள் அம்மா)
2. அம்மா அம்மா என்றுமே
யாரை அழைப்போம் இனிமேலே
விம்மி விம்மி அழுகின்றோம்
வேதனைக் குரல் கேளீரோ!
(எங்கள் அம்மா)
3. அழகுஅருமைப் பாப்புடனே
அருட்செல்வி அமலா மற்றோரும்
அழுது கொண்டே இருக்கின்றோம்
அம்மாவைக் காட்ட மாட்டீரோ!
(எங்கள் அம்மா)
4. சின்னப் பாப்பா வைக்க மொடு
சேர்ந்து வளரும் வளர்மதியும்
சின்னக் கைகளை அசைத்தாட்டிச்
சிரித்து ஆடுதல் கண்டிடவே!
(எங்கள் அம்மா)
5. தலைசீவிச் சட்டைகள் மாட்டிடுவார்
தன் கையால் உணவு ஊட்டிடுவார்
விலைமதிப் பில்லாக் கல்விக்கே
வேனில் எங்களை அனுப்பிடுவார்
(எங்கள் அம்மா)
6. திக்கற்ற குழந்தைகள் எதிர்காலம்
செம்மையாய் அமைய வேண்டுமென்றே
தக்கதோர் ஏற்பாடு செய்துவிட்டுத்
தாயே எங்குப் போய் மறைந்தீரோ!
(எங்கள் அம்மா)
7. எங்கள் வாழ்வு வளம் பெறவே
எந்நாளும் உழைத்த எங்கள்
மங்காத ஒளிவிளக்கு எங்கே
மறைந்தது ஏனோ கூறீரோ!
(எங்கள் அம்மா)
8. அய்யா அம்மா வழியினிலே
அனைவரும் நாங்கள் தொடர்வோமே
கைகளைக் குவித்தே தொழுகின்றோம்
கண்ணீரைக் காணிக்கை யாக்குகிறோம்!
(எங்கள் அம்மா)

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்


வாழ்க்கை குறிப்புகள்
1920 மார்ச் மாதம் 10ஆம் நாள் வேலூரில் வி.எஸ்.கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும், கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை படித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டு விட்டது.
1936இல் வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.
1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் (27.8.1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி, கே.அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உரையாற்றினார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில் அரசு தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, பாபநாசம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

1949 பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம்  9ஆம் நாள் பெரியார் - மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே.அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என்று தமிழிலும், E.V.R மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தர சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். மணியம்மையார் தலைமையில் சவ ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
19-1-1958 விடுதலையில் வெளியான இளந்தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும், வெளியிடுபவருமான ஈ.வெ.ரா.மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1959 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம்  சோர் வடையாமலும் கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும், அன்னை மணியம்மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1973 டிசம்பர் 24ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்ற பின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பேற்றுக் கழகத்தை வழிநடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு, மணியம்மையார் அவர்களை கழகத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த டில்லி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23.9.1974 அன்று பெரியார் -மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் துவக்கப்பட ஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக் கட்டளைக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைவராக வும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் நடந்த இராவண லீலா நிகழ்ச்சி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது.

பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை நிறுவினார். பெரியார்- மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியை திருச்சியில் ஏற்படுத்தினார்.
1975 ஏப்ரல் 26-இல் வைக்கக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்துகொண்டு பெண்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை அண்ணாசாலையில் 21.9.1975 அன்று கலைஞர் சிலையை அமைத்து திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையார் மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

மிசா காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையாரும், மற்ற தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர்  இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார் திடல் முகப்பில் பெரியார் பில்டிங்ஸ் என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை பொதுமருத்துவமனையில் காலமானார்.

சனி, 5 ஜூலை, 2014

திராவிடர் இயக்க வாழும் வீராங்கனை - திருமகள் இறையன்

இன்று பவள விழா (04.07.2014 ) காணும் சுயமரியாதை வீராங்கனை 





பொதுவாகப் பெண்கள் சிறுவயதிலேயே சிந்திக்கும் திறமையை இயற்கையாகவே பெற்றிருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனையும் அவர்களுக்கு இருந்தாலும் பெற்றோர், சுற்றுச்சூழல் இவைகளால் வளர வளர எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாமல், செயல்பட இயலாமல் அழுத்தி வைக்கப்பட்டு விடுகின்றனர். இவைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவது மிகச்சிலரால் மட்டுமே முடிகின்றது. அப்படி வெற்றிபெற்ற வீராங்கனைகளில் ஒருவர்தான் திருமகள் இறையன் அவர்கள்.

பிறந்த இடம்: பழனி (தாத்தா வீடு) பிறந்த தேதி: 4.7.1939 தாய் தந்தை: சாமிநாதன், பொன்னுத்தாய் கல்வி: எஸ்.எஸ்.எல்.சி., ஆசிரியர் பயிற்சி இவர்கள் வளர்ந்தது பரமக்-குடியில் 16 ஆண்டுகள். இவருடைய தந்தை உணவு விடுதி நடத்தி வந்தார். தன்னுடைய 7ஆம் வயதில் தங்கள் உணவு விடுதியில் பள்ளர் ஜாதியைச் சார்ந்தவரை உணவருந்த அனுமதிக்காதது இவருடைய உள்ளத்தில் ஜாதிபற்றிய தாக்கம் மிக அழுத்தமாகவே பதிந்துவிட்டது.

அது மட்டுமல்ல. பெண்கள் படிக்கக்கூடாது என்று மூன்றுமுறை கல்விகற்க மறுப்பு தெரிவித்த தந்தையை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து பள்ளி செல்வதற்கு அனுமதி பெற்று வெற்றி பெற்றார்.

10ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்துவிட்டார். இவருடைய மாமா ஆர்.ஏ.பி.சிவம் ஆசிரியர் கந்தசாமியின் நெருங்கிய நண்பர். அந்நாளில் தி.மு.க. செயலாளர் பரமசிவம் தந்த புத்தகத்தை ஆசிரியர் கந்தசாமியிடம் தரும்போது தமிழாசிரியராக நகைச்சுவையுடன் பாடம் நடத்தியது இவரின் உள்ளத்தில் ஓர் ஈர்ப்பு உணர்வு ஏற்படச் செய்தது. இவரைச் சந்தித்தது அக்டோபர் மாதம் 1954ஆம் ஆண்டு. இவருடைய நெருங்கிய தோழி சுலோச்சனா. இருவரும் வகுப்புத்தோழிகள். ஆசிரியர் கந்தசாமிக்கும் வேண்டிய தோழியாக இருந்தார்.

தந்தை இறந்தபின் மதுரையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியில் பயிற்சி முடித்ததும் கடைசியாகக் கட்டவேண்டிய பணம் கட்டுவதற்கு உதவியில்லாததால் மிகுந்த சிரமத்திற்கிடையில் ஆசிரியர் கந்தசாமி அந்தப் பணத்தைக் கட்டி ரிலிவிங் சர்டிபிகேட் வாங்குவதற்கு உதவி புரிந்தார்.

சிறு வயதிலேயே ஜாதிபற்றிய சீர்கேடுகள் உள்ளத்தைத் தாக்கி இருந்ததாலும், தன்இன ஆண்கள் 2, 3 மனைவியர்களைத் திருமணம் செய்துகொள்ளும் ஒழுக்கமற்ற முறையை இவர் விரும்பாததாலும் தன் இனத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. மேலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்வதே குற்றம் என்ற கட்டுப்பாட்டு முறையையும் அறவே வெறுத்தார். அந்த நாளைய ஜாதிக்கலவரம், இமானுவேல் தாக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், தன் மாமாவின் காதல் ஜாதி காரணத்தால் தடைப்பட்டுப் போனதும் இவர் உள்ளத்தை மிகவும் பாதித்தன.

அதனால் தன் ஜாதியில் திருமணம் செய்ய விரும்பாததால் உதவிபுரியும் மனப்பான்மையும், பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்ட ஆசிரியர் கந்தசாமியை (இறையனார்) 3.10.1959ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி(கிறிஸ்துவ)யில் படிக்கும்போது அந்த மதத்திலும் ஜாதி வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்து மதங்களையே வெறுத்தார்.

திருமணமான பிறகு அன்னை மணியம்மையார் சந்தித்த அவலங்-கள், அவதூறுச் சொற்கள் அனைத்தும் இவர்களும் பிறரால் கேட்கும் நிலை ஏற்பட்டது. உதாரணமாக, தெருவில் செல்லும்போது அதோ தேவடியா, அவுசாரி போகிறாள் என்று பெண்களே தூற்றினர். அவைகளை இவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அருப்புக்கோட்டையில் முதல் பெண் குழந்தை பண்பொளி பிறந்தது. அதிலும் கைராசியில்லாத டாக்டர் சதாசிவம் என்று பெயரெடுத்தவரிடம் வெற்றிகரமாக குழந்தைப் பேறு நடந்து, மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது.

1959 செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாளுக்குப் பரிசாக 16 ரூபாயில் முதல்முதலாக சேலை எடுத்துத் தந்தார் இறையனார் என்பது இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது என்று பெருமையுடன் கூறும் இவர் தீபாவளிப் பண்டிகைக்கு அக்கம் பக்கத்தினர் தரும் பலகாரங்கள்கூட அந்த மூடநம்பிக்கையை நாம் ஏற்றுக்கொள்வதாக ஆகாதா என்று கணவரிடம் விவாதம் செய்து வெற்றி பெற்றதையும் மறக்கவில்லை. இரண்டாவது குழந்தை இசையின்பன்: 10.6.1962இல். மூன்றாவது குழந்தை இறைவி: 24.8.1964இல். நான்காவது குழந்தை மாட்சி: 22.2.1966லும் பிறந்தனர்.

ஆசிரியர் பணியில் 60லிருந்து 1997 வரை பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பார்வதி அவர்கள் மகளிரணி பொறுப்பில் இருந்தபோது பணியாற்றிக் கொண்டே விடுமுறை நாள்களிலும், மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு இயக்கப் பணிகள், சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்டார்.

திருப்பூரில் பணியாற்றியபோதும், எந்த ஊருக்கு மாற்றலானாலும் அங்கு இயக்கப் பணிகள் முழு ஈடுபாட்டுடன் ஆற்றினார்.

சேலம் மாநாட்டுத் தந்தை பெரியாரின் தீர்மானத்தை, மதுரையில் தேவசகாயம் அவர்களின் பெண்கள் திருமணத்தில் வரவேற்பு இதழ் வாசித்தளித்ததுதான் இவரின் முதல் மேடைப்பேச்சு.

மாநாடுகளில் 1967க்குப் பிறகு முழுமையான இயக்கப்பணி, சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் யாரோ எறிந்த செருப்பு, நெற்றியில் இரத்தக்காயம் ஏற்படுத்த மேலும் கொள்கையில் உறுதியோடு பணிசெய்திடும் எண்ணம் வலுப்பெற காரணமாயிற்று. தபால் அலுவலக மறியலில் அன்னை மணியம்மையார் காலத்தில் கலந்துகொண்டார்.

மூத்த மகள் பண்பொளியின் திருமணம் அம்மா தலைமையில் நடைபெற்றபோது கமிட்டியும் கூட்டப் பட்டிருந்ததில் கறுப்புச் சட்டையணிந்தவர்கள் முதலில் சாப்பிட்டதால் உறவினரின் கசப்பு.

இசைஇன்பன்-, பசும்பொன் திருமணம் மேனாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கறுப்புக்கொடி காட்டி கைதாகி திருமண மண்டபத்தில் இருந்தபோது ஆசிரியர் தலைமையில், அனைத்துக் கட்சியினரின் வாழ்த்துதலோடு நடைபெற்றது போன்றவை இவரின் மறக்கமுடியாத அனுபவங்கள்.

1990இல் தஞ்சையில் நடைபெற்ற ஜெயில்சிங் கலந்துகொண்ட மாநாட்டில் இறைவி, நயினார் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணமும் ஒரு சவாலை சந்தித்து சாதித்த திருமணம்தான் என்றால் மிகையாகாது! உடன் பணிபுரிந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில்தானே திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுவீர்கள்? தாழ்த்தப்பட்ட இனத்தில் திருமணம் செய்வீர்களா? என்று கேட்டதை சவாலாக ஏற்று நான்கு ஆண்டுகள் தேடி தாழ்த்தப்பட்ட இன மாப்பிள்ளை நயினாருடன் திருமணம் செய்தது சாதனைதானே?


மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்தபோது ஆசிரியர் அவர்கள் அரசுப்பணியில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகக் கூடாது. அப்படி மீறி கலந்துகொண்டால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட உங்களை நீக்கிட வேண்டியிருக்கும் என்று நல்லெண்ணத்தோடு கண்டித்ததனால் அதில் கலந்துகொள்ளவில்லை. பணிஓய்வுக்குப்பின், எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு ஒரு நாள் சிறை சென்றாலும், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏக்கத்துடன் கூறுகிறார். இறையனார் அவர்களுடன் 46 ஆண்டுகள் வாழ்ந்த நிறைவான வாழ்க்கை.

5 அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தும் சிறிதும் மனச்சோர்வு, உடல் சோர்வின்றி இயக்கப் பணிகள் ஆற்றுவதில் மனநிறைவு.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திற்கு இயக்குநராகப் பணிபுரியும் இவர் ஜாதி மறுப்புத் திருமணம், மூடநம்பிக்கைகள் அகற்றி பதிவுத் திருமணம் பலபேருக்குச் செய்து தந்தை பெரியாரின் ஜாதிகளற்ற சமுதாயம் காணும் பணியை சிறப்புடன் செய்து வருகிறார்.

சமுதாய மாற்றத்திற்கு சிறை செல்லத் தயாராக இருக்கும் இப்படிப்பட்ட வீராங்கனைகள் திராவிட இயக்கத்தைத் தவிர வேறு இயக்கத்தில் காணமுடியுமா?

ஒரு நாள் சிறை சென்றாலும், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே!

----------------நன்றி:-"விடுதலை"ஞாயிறுமலர் 27-6-2009

செவ்வாய், 3 ஜூன், 2014

அ. இறையன்


 இறையன் அவர்களின் இயற்பெயர் கந்தசாமி என்பதாகும். மதுரையில் இராமுத்தாய் - அழகர்சாமி ஆகிய பெற்றோரின் மூத்த மகனாய் 4.6.1930 அன்று பிறந்து, திண்டுக்கல்லில் வளர்ந்து, இன்று தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தின் தலைமையகத்தில் பொறுப்பாற்றிவர்.






 
சிறுவனாக இருந்தபோதே பெரியார்ப் புரட்சியின் பாதிப்புகளுக்குத் தன்னை யறியாமலேயே இலக்கானார். அப்பாதிப்புகள் பிற்காலத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளாக வளர்ந்து இவரை அறிவாசான் அய்யாவின் பாசறைக்கு இட்டுச் செல்லுவதில் பங்காற்றியுள்ளன.



ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இவர் சேருங்காலத்திற்குள் ஒரு முதிர்ச்சியுள்ள திராவிடர் கழக இளைஞனாய் ஆகிவிட்டிருந்தார். எனவே ஆசிரிய மாணாக்கன் என்னும் அந்தத் தகுதியை எய்தியவுடனேயே இவர் ஆற்றிய முதல் வினையே திராவிடர் மாணவர் கழகம் நிறுவியமைதான்.

பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1948-இல் ஈரோட்டில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஏற்கனவே திண்டுகல்லில் இவரின் நடவடிக்கைகளைக் கவனித்திருந்த டார்ப்பீடோ ஏ.பி. சனார்த்தனம் அவர்களால் கி. வீரமணி,, மு. கருணாநிதி என்னும் அன்றைய இளம் முன்னோடிகளிடம் இவர் இயக்கத்திற்கு நன்கு பயன்படுவார் என அறிமுகப்படுத்தப் பெற்றார். அப்போதிருந்து இப்போதுவரையிலும் தமிழகத்தில் கழகச் சார்பில் நடைபெற்றுள்ள பெரிய மாநாடுகள் அனைத்திற்கும் சென்று கலந்திருக்கிறார்.

1949-இல் நிகழ்ந்த விரும்பத்தகா வெளியேற்றங்களின்போது, ஆசிரியர்ப் பயிற்சி மாணவராக இருந்த இவர், அய்யாவின் விளக்கங்களை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு உணர்ச்சிக் கடிமையாகாது, அறிவின் ஆட்சிக்கு இலக்கானவராய் - அய்யாவின் கழகத்தில் ஊன்றி நின்றார்.

மேலும் திண்டுக்கல் திராவிடர் கழகத்தையே முற்றிலுமாகக் கலைத்துவிட வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியோரிடம், கழகத்தைச் சார்ந்து கடைசியாக ஒரேயொருவர் இருந்தாலும் அவரிடம் பிறர் பதவி விலகல் மடல் கொடுத்துவிட்டு வெளியேறிவிடவேண்டுமே யொழிய கழகத்தையே கலைப்பதாகக் கூறுவதை ஒப்பமாட்டோம்! என்று உறுதி காட்டியதுடன், புதிய நிருவாகக் குழு ஒன்றை அரும்பாடுபட்டு அமைப்பதில் பெரும்பங்காற்றினார்.
அத்துடன் அய்யா-அம்மா ஏற்பாட்டை வரவேற்கும் முறையில் திண்டுக்கல்லுக்கு அவர்களை வரவழைத்து மாபெரும் கூட்டமொன்றை மாணவர் கழகத்தின் சார்பில் நடத்திக் காட்டினார்.

திராவிடர் மாணவர் கழகத்தில் தொண்டாற்றிக்கொண்டே YMDA எனும் திராவிட இளைஞர் விளையாட்டுக் கழகம் அமைத்து, வளைப்பந்து,  உதை பந்து ஆகிய விளையாட்டுகளில் நம் இளைஞர் பயிற்சியுறச் செய்து, பல போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பெற ஏற்பாடு பண்ணியவர் இவர்.

ராஜகோபாலாச்சாரி புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வித் திட்டம் கொண்டுவந்தபோது உயர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த இவர் அக்கல்வித் திட்டத்தை மறுத்து ஆசிரியர்களின் ஆய்வுக் குழுக்களில் குரல் கொடுக்கத் தயங்கவில்லை.

அதே ஆச்சாரியார் ஆட்சியின்போது அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பெற்ற இவர், அ. கந்தசாமி, ஆசிரியர், அரசர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி, பறமக்குடி என்னும் முகவரிக்கு விடுதலை வரவழைத்து, பார்ப்பன ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர் அனைவரையும் படிக்கச் செய்தார்.

பறமக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கழகக் கிளைகளைச் செம்மைப் படுத்துவதற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவந்த வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், என்.ஆர். சாமி ஆகிய முகவை மாவட்டத் தலைவர்கட்குப் பெருந்துணை புரிந்தார் இவர்.

சில ஆண்டுகளிலேயே நிலையுயர்வு வழங்கப்பட்டு, பள்ளி ஆய்வாளராய்த் தேவகோட்டைக்கு அனுப்பப்பட்ட இவருக்கு ஆசிரியருலகிலும் அரசு அதிகாரிகளிடத்திலும் நற்பெயர் கிட்டியது.

பெரியார் நெறியைப் பின்பற்றிய இவர் ஆசிரியர்கட்கு உயர்ந்த மதிப்பளித்து (கல்வியதிகாரிகளை எஜமான் என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர்கள் வாழ்ந்த காலமது!) அவர்களுடன் தோழராக, ஊக்குவிக்கும் வழிகாட்டியாகப் பழகிய இவரது பான்மை ஆசிரியர்களிடையே வியப்பு, தன் மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தோற்றுவித்தது!

அக்காலத்தில் முதியோர் கல்வி என்னும் பெயரில் நடைபெற்ற இரவுப் பள்ளிகளைத் திடீரென்று பார்வையிடச் சென்று ஊர்மக்கள் கூடலுக்கு ஏற்பாடு பண்ணிக் கல்வியின் இன்றியமையாமையைப் பயன் கூட்டும் வண்ணம் எடுத்துரைத்த இவரின் பொறுப்புணர்ச்சி, அக்காலத்திய அய்ந்தாண்டுத் திட்டங்களைப் பரப்புவதில் இவர் காட்டிய பேரார்வம் ஆகியவற்றால் கல்வித் துறை மேலதிகாரிகள் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியாளர்களும் இவரைப் பாராட்டி, காமராசர் அரசுக்கு அறிக்கைகள் அனுப்பினர்.

சில சிற்றூர்ப் பள்ளிகளில் ஆதித் திராவிட பழந்தமிழ்க் குடிக் குழந்தைகள் பிரித்து அமரவைக்கப் பட்டிருந்த சூழ்நிலைகளை - தலைமையாசிரியர்களிடம் நயமாகவும் சட்டப்படி வற்புறுத்தியும் சரிசெய்ய முனைப்புக் காட்டியவர்.

அய்யா அவர்கள் 1957-இல் சிறைப்படுத்தப்பட்டுச் சென்னை-பொது மருத்துவமனையில் இருந்தபோது சென்னைக்கு வந்த இவர் அன்னை மணியம்மையாரின் ஏற்பாட்டில் அய்யாவுக்கு உணவு கொண்டுபோகும் தோழருடன் சென்று அய்யாவைக் கண்டவர்.

பறமக்குடியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டத்தில் அவ்வூரில் திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர்ப் பொறுப்பிலிருந்த - ஏற்கனவே இவருடன் பழக்கப்பட்ட - நண்பரின் மருமகள் இலட்சுமி (பின்னர் திருமகள் ஆகிவிட்டார்) அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த மாணவி.

அய்ந்தாண்டுக் காலம் பொறுத்திருந்து ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு எந்தச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும் எனும் உளத்திண்மை பூண்டு, அச்சுறுத்திய எதிர்ப்புகளையெல்லாம் திட்டமிட்டு வென்று, 10.3.1959 அன்று இருவரும் துணைவர்களாக - இணையர்களாக - திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துகளுடன் தந்தை பெரியாரின் முதற்கொள்கையான ஜாதியொழிப்புக்குப் பங்களிப்புச் செய்த வீரர்களாயினர்!

இவர்களின் மக்கள் பண்பொளி, இறைவி, மாட்சி ஆகிய மூன்று பெண்களுக்கும் இவரிருவரின் ஜாதிகளையும் சேராதோரைக் கணவர்களாய் ஆக்கிவைத்துக் காட்டினர். அவ்வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் முறையே அன்னை மணியம்மையார் தலைமையிலும், இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி செயில் சிங் முன்னிலையிலும், ஆசிரியர் கி. வீரமணியவர்களின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டன.

 தன் துணைவியாரிடம் இவர், தங்களின் இரண்டாம் செல்விக்குத் தமிழ்க்கண்டத்தின் தலைக் குடியான ஆதித் திராவிடப் பஞ்சமக் குடியிலிருந்து ஒரு துணைவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்னும் தனது நெடுங்கால உள்ளக் கிடக்கையை சொல்லிக் காட்டியபோது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, நானும் பிள்ளைகளும் முன்பே இப்படி நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்று முடிவு செய்து வைத்திருக்கிறோமே! என்றார் திருமகள்.
 ஒரு  மாநாட்டில் அவ்வாறே நடந்தது !

. இவர்களுடைய மகனின் வாழ்க்கையொப்பந்தம் சற்று வேறுபாடான - புதுமை வாய்ந்த நிகழ்ச்சியாய் அமைந்தது. குடியரசுத் தலைவருக்கு இயக்கம் கருப்புக்கொடி காட்டும் பேரணி நடத்தி, ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டிருந்தபோது, இவ்விருவரின் திட்டப்படி, இசையின்பன் - பசும்பொன் வாழ்க்கை ஒப்பந்தம் தமிழர் தலைவரால் நடத்தி வைக்கப்பட்டது. இச்சிறைத் திருமணம் பற்றி, கைது செய்யப்பட்டோர் கைப்பிடித்துக் கொண்டனர் எனச் செய்தியேடுகள் வியந்து எழுதின!
பல ஆண்டுகளாக இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடமுடியாத சூழ்நிலையில் பிறவகை ஒத்துழைப்பு மட்டுமே காட்டி வந்த இறையன் எனும் தமிழ்ப்பெயரை எய்திக் கொண்டுவிட்ட கந்தசாமியின் வாழ்வில் கற்பனையே செய்திராத அந்த நல்வாய்ப்பு ஏற்பட்டது.

2.7.1970 அன்று சிவகங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகக் கூட்டத்தில் மக்களுக்கு அறிவு கொளுத்த வந்திருந்த அறிவின் எல்லை அய்யா அவர்களைக் கண்டு வணக்கம் தெரிவிக்கச் சென்ற இவரை மாவட்டக் கழக முன்னோடிகள் அம்மாபெரும் பொதுக்கூட்ட மேடையில் அய்யாவின் முன்னிலையில் பேசுமாறு செய்துவிட்டனர்.
நல்லவண்ணம் தன்மான இயக்கத் தனிச் சிறப்புகளை மக்களின் முன்பு எடுத்துவைத்து அமர்ந்த இறையனை உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் அய்யா அவர்கள் உள்ளமாரப் பாராட்டினார். என்னுடன் இப்படியே பறமக்குடிக்கு வருகிறீர்களா? என்பதாகவேறு அய்யா கேட்டுவிட்டார். அவ்வளவுதான்; இவர் தன்னையே மறந்தார்; எங்கோ பறந்தார்!

தொடர்ந்து அய்யா அவர்கள் மக்களுக்குப் பாடங்கள் கற்பித்த கூட்டங்களில் பங்குபற்றும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. உலகப் புகழ் வாய்ந்த சேலம் மாநாடு (1971), இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருவாரூர் மாநாடு (1971) ஆகிய தனிச் சிறப்பு படைத்த மாநாடுகளில் இவர் சிற்றுரையாற்றுமாறு அய்யா செய்தார்கள். தி.மு.க. ஆட்சியில் பகுத்தறிவாளர் கழகங்கள் நிறைய முளைத்தெழுந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பிய பெரும் பணியில் நல்ல அளவுக்குப் பங்குண்டு இவருக்கு.
இவரின் தொண்டின் எல்லையின் விரிவாக்கத்திற்காகவும் இவரது உரைப் பொழிவுத் திறன் கழக இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் கழகத் தலைமை வட ஆர்க்காட்டு வடசேரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு இவரை அழைத்து, பாடங்கள் எடுக்குமாறு ஏற்பாடு செய்தது. அங்கு இவர் விளைவித்த தாக்கத்தை மதிப்பிட்ட கழகத் தலைமை தொடர்ந்து இவரைப் பயிற்றுநர்ப் பணியில் ஈடுபடுத்தியது.
பகுத்தறிவாளர் கழகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர் கழகத்தின் தலைமையால் புதிதாக உருவாக்கப்பெற்ற பகுத்தறிவு ஆசிரியரணி எனும் அமைப்பின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவ்வமைப்பின் சார்பில் பல பயன் கூட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
ஆற்றலும் ஆர்வமும் மிக்க சென்னைப் பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்களின் துணை கொண்டு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பயிலும் (பார்ப்பனரல்லாத்) தமிழ் மாணவ-மாணவியர்க்கு இலவயமாகச் சிறப்பு வகுப்புகள் இவரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க இனத் தொண்டாகும். பல ஆண்டுகள் இத்திட்டத்தினைப் பெரியார் திடலில் நடைமுறைப்படுத்தினார் இவர்.
1989-மே 31 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர் மறுநாட் காலையே தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி உடனடியாகத் தமிழ்நாட்டு அரசுப் பணித் தேர்வாணைக்குழு நடத்தும் தேர்வுகட்கு நம் இன இளைஞர்கட்குப் பயிற்சியளிக்கும் திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வினைப்பாட்டில் இறங்கிவிட்டார்.
ஏற்கனவே நமதியக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த இவரை, விடுதலையில் ஆன்மீகம் அறிவோமா? எனும் பொருள்பற்றித் தொடர்ந்து எழுதும் பத்திப் படைப்பாளர் (ஊடிடரஅளைவ) ஆக்கினார் விடுதலை ஆசிரியர். அம்முயற்சியில் நல்ல உழைப்புக் காட்டினார் இவர். இன்னும்-கழகத்தின் பயிற்சிப் பட்டறைச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் (கலைத்துறை), விடுதலை அயல் நாட்டுப் பதிப்பு (இணைய தளம்) பொறுப்பாளர், பெரியார் பகுத்தறிவு ஆய்வக-நூலக இயக்குநர், தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர், பாரளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் - மேடை ஒருங்கிணைப்பாளர், பெரியார் பயிலக ஆங்கிலப் பேச்சுப் பயிற்றுநர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று, குடி செய்வார்க்கு இல்லை என்று பெரியார் காட்டிய தொண்டறத்தை மேற்கொண்டு உண்மையாகவும் செம்மையாகவும் ஒழுகியவர் இவர். வெல்லுஞ் சொல் திறன் வாய்ந்த இவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பெரியாரியலை மக்களிடம் பரப்புவதில் இன்பம் கொண்டவர். சில ஊர்களில் நடந்த இயக்க நிகழ்ச்சிகளின்போது கொள்கை எதிரிகளின் தொல்லைகட்கும் உள்ளானவர்.

பட்டிமன்றங்கள் பாங்கறிந்து ஏறிச் சொல்லாடல் புரிவதில் நிறையப் பட்டறிவு இவருக்கு உண்டு என்பதால் இயக்கத்திற்கு நல்ல அளவிற்குப் பயன்பட்டார். மதப் புன்மைகளையும் பாழ்த்தும் தன்மைகளையும் மக்களிடையே வெளிப்படுத்தி நாட்டையே குலுக்கிய ஹ-பட்டிமன்றங்களை இயக்கம் ஏற்பாடு பண்ணியபோது இவர் பெரும் பங்காற்றினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சோவியத் இதழ்கள் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நடந்த சோவியத் யூனியனில் நடைபெறும் மாற்றங்கள் சோஷியலிசத்தைப் பலப்படுத்துமா? பலவீனப்படுத்துமா?  என்னும் பட்டிமன்றத்தில் பலவீனப்படுத்தும் என்று கழகத்தின் சார்பில் வழக்காடிய அணியின் தலைவராக இறையன் எடுத்துவைத்த வழக்கு பெரும் பரபரப்பை விளைவித்ததுடன் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களின் அரும் பாராட்டுகளை ஈட்டியது. அம்மேடையில் இவர் சோவியத் தூதுக் குழுவினரின் முன்னிலையிலேயே போச்சு, போச்சு என அலறிய வண்ணமே, சோவியத் ஒன்றியம் உடைந்தே போனது!

இவரது பயனுடைய உரை வீச்சின் வலிமையையும் இவரின் பெரியாரியற் பயிற்சியின் ஆழத்தையும் மதிப்பீடு செய்த கழகத் தலைமை இவருக்குப் பெரியார்ப் பேருரையாளர் விருதளிக்க வேண்டுமென்று கருதியது.
அதன்படி 1982-ஃபெப்ரவரியில் திருச்சியில் மூன்று மாலைகளில் கற்றுத் துறைபோகிய சான்றோர்களின் தலைமையில் முறையே, பெரியார் ஒரு சமுதாய வழக்குரைஞர், ஒரு நோய் முதல் நாடும் மருத்துவர், ஒரு தேர்ந்த பொறியாளர் என்னும் தலைப்புகளில் செய்திச் செறிவான உரைப் பொழிவுகள் நிகழ்த்திய இறையன் அவர்களுக்குப் பெரியார்ப் பேருரையாளர் என்னும் விருதினைத் கழகத் தலைமை 21-02-2002 அன்று அளித்துப் பெருமைப்படுத்தியது.

இவரின் மொழிபெயர்ப்பாற்றலில் நம்பிக்கை கொண்ட கழகத் தலைமை நம் இயக்க நிகழ்ச்சிகளில் இவரைப் பயன்படுத்தியது. வி.டி. ராஜசேகர், சந்திரஜித், டி.பி. யாதவ், பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, தேவராஜ் அர்சு, பிரகாஷ் அம்பேத்கர் முதலியோரின் ஆங்கிலப் பேச்சுகள் இவரால் மொழி பெயர்த்து மக்களின் முன் வைக்கப்பட்டன.

பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி போன்றோர், இட்டு வாருங்கள் இறையனை என விரும்பியழைக்கும் அளவிற்கு, மக்களிடம் தாக்கம் விளைவிக்கவல்லதாக இவரது மொழி பெயர்ப்புத் தன்மை இருந்தது.
இவரின் எழுத்து நடை தனித்தன்மை வாய்ந்தது. தூய தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் - பெரிதும் சிறிதுமாக - எழுதியுள்ளார். பெரும்பாலும் எல்லாமே ஆய்வு முறையில் அமைந்தவை.

விடுதலை, உண்மை - சிறப்பு மலர்களில் அய்யாவின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த விளக்கக் கட்டுரைகளை விரித்தெழுதியுள்ளார்.

இவர் எழுதிய  சுயமரியாதைச் சுடரொளிகள், இல்லாத இந்து மதம், ஜெயலலிதாவின் பின்னாலா திராவிடர் கழகம் சென்றது? ஆகிய நூல்கள் பிறரால் மேற்கோளாகக் காட்டப்படுபவையாக விளங்குகின்றன!
பெரியார் ஆயிரம், மகாபாரத ஆராய்ச்சி என்னும் தொகுப்பு நூல்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தமிழக அரசின் திறந்த வெளிப் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் அய்யா பற்றிய  இவரின் கட்டுரை இடம் பெற்றது. இன்னும் இவரது நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

குறைந்த அளவே புழக்கத்திலுள்ள தனித்தமிழ்ச் சொற்களை இவர் தன் கட்டுரைகளில் ஆங்காங்கே பெய்து எழுதுவதால் புரிதலின் நேரம் கூடுகிறது என்னும் நடப்புண்மையை இவர் பகுத்தறிவுப் பார்வையுடன் ஏற்றுக் கொள்ளுகிறார் எனினும் நாளடைவில் நன்மையே என நம்புகிறார். பெரியாரியல் எனும் சொல்லாட்சியைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்ததில் இவருக்குப் பேரளவுப் பங்குண்டு!

இவர் ஒரு பாடகரும்  ஆவார். பாடல்கள் இசைத்தல் மட்டுமின்றி இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் அவற்றிற்குப் பண்ணமைத்துப் பாடுவதிலும் பயிற்சி நிரம்பிய இவரின் ஆண்களா? பெண்களா?, தமிழினத்தின் விடிவெள்ளி, வாராது வந்த மணி  எனும் பாடல்கட்கு நிறைய வரவேற்பு. தஞ்சை-தங்கம் வழங்கு விழாவில் இவர் இயற்றி இசைத்த ருஎநசளயட ஊடிஅஅரவைல என்ற பாடல் வெளிநாட்டு விருந்தினரின் பெரும் பாராட்டை ஏற்றது!

இயக்கத்தின் வளர்ச்சிக்கான களப்பணிகளில் ஈடுபாடும் கழகக் கிளர்ச்சிகளில் பங்குபற்றும் துணிச்சலும் கொண்ட இவர் எட்டுமுறை காவல் துறையினரால் தளையுண்டவர்.

இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்காலத்தில் தளைசெய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இறையன் பெயரும் இருப்பதாகக் கூறி, காவல் துறையினர் இவரை அழைத்துக் கேட்டபோது, பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து விலகிக் கொள்ளுவதாக ஒருபோதும் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று வீரங்காட்டினார்.


இறையனின் இணையர் திருமகள், மகள்கள் மூவர், மருமகள் ஆகிய அய்வரும் மீட்பர் பெரியாரின் உருவக்கல் பதித்த தொங்கலொன்றை அணிந்துகொண்டுள்ளனர். வீரமணி, வெற்றிமணி, புயல், சீர்த்தி, அழல், புகழ், இனநலம், அடல் என்பவை இக்குடும்பப் பிள்ளைகளின் பெயர்கள்.

சனி, 1 மார்ச், 2014

மறைந்தாயோ செல்வமே!

-தந்தை பெரியார் 

மறைந்தாயோ செல்வமே! துறந்தாயோ மானிலத்தை! என்று 2 கோடி தமிழர்கள் அலறித் துடிக்கவும், காலஞ்சென்ற பன்னீர்செல்வமே காலஞ்சென்று விட்டாயா? என்று பெரியார் புலம்பவும் விட்டுச் சென்றார். நமது செல்வம் என்று எண்ணவேண்டியிருக்கிறது.
கவர்னரின் அனுதாபச் செய்தியிலிருந்து: மார்ச் மாதம் 1ஆம் நாள் அதிகாலை கராச்சியை விட்டு நமது செல்வத்தைத் தாங்கிச் சென்ற ஹனிபால் எங்கே? எங்கே? என்று மக்கள் துடிக்கின்றனர். ஹனிபால் மறைந்த மாயமென்ன? செல்வத்திற்கு உற்ற கதி என்ன? என்று மக்கள் துடித்தனர். கவர்னர் அறிக்கை ஹனிபால் கடலுள் மூழ்கியிருக்க வேண்டும். நமது செல்வம் உயிர் துறந்திருக்க வேண்டும் எனக் கருத வேண்டியிருக்கிறதென முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி நமது அருஞ்செல்வத்தைக் குறித்து எண்ண, என்ன இடமிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. இச்செய்தி ஏற்கனவே மார்ச் 2ஆம் நாள் முதல் சித்தம் கலங்கித் தவிக்கும் தமிழர்களைப் பித்தங்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைந்தகாலையில் எல்லாம் பதறாத நமது பெரியார், செல்வம் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டதும் கலங்கினார் என்றால், மற்றவர்களைக் குறித்து நாம் என்ன சொல்ல வேண்டுமென்று கேட்கிறோம்.
இவ்வளவு பெரிய கலக்கத்தை, துயரத்தை அவரது மறைவு உண்டுபண்ணியதேன் என்றால் அவர் தமிழர்கள்பால் காட்டிய அன்பும் தமிழர்கள் அவர்பால் கொண்ட நம்பிக்கையும் என்றே சொல்வோம்.
தந்தை தனது தனயனைப் பிரிந்தகாலையிலும், தனயன் தந்தையைப் பிரிந்தகாலையிலும் கணவன் மனைவியைப் பிரிந்தகாலையிலும், மனைவி கணவனைப் பிரிந்தகாலையிலும் வருந்துவதின் காரணம் அன்பு, காதல் என்று சொன்னாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் எதிர்பார்த்த உதவியென்பதே நமது அபிப்பிராயம். ஆனால், இன்று, நமது செல்வத்தின் மறைவைக் குறித்து 2 கோடி தமிழர்களும் அலறித் துடிப்பதின் காரணம் அன்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று நாம் எந்த மலையுச்சியிலிருந்தும் சொல்வோம். பெரியாரிடம் அவருக்கிருந்த அன்பு எவ்வளவு உண்மையான என்பதை, அன்று அதாவது சென்ற பிப்ரவரி திங்கள் 26ஆம் நாள் மாலை சென்ட்ரல் ஸ்டேஷனை விட்டு நமது செல்வத்தை ஏற்றி சென்ற ரயில்வண்டி புறப்பட இருந்த சமயத்தில் இருவர்களுடைய கண்களின் கலக்கத்தையும் உதடுகளின் அசைவையும் கண்ட எவரும் நன்கு அறிவார்கள். அக்காட்சி ஒன்றேபோதும் செல்வம் தமிழர்கள் நலனில், தமிழர்கள் வாழ்வில் கொண்டுள்ள பற்றை விளக்க என்று நம்புகிறோம்.
வெண்ணெய் திரண்டுவருகையில் தாழி உடைந்தாற்போல், அரசியல் எதிரிகளால் நையாண்டி செய்யப்பட்டு வந்த நீதிக்கட்சி உருண்டு திரண்டு உருவாகி வருகையில் செல்வம் மறைந்தார் என்ற செய்தி உண்மையாகவே 2 கோடி தமிழர்களும் தங்கள் தலையில் இடிவிழுந்ததென எண்ணுவர் என்பதில் சந்தேகமில்லை.
நீதிக்கட்சியே அவரது உயிராயிருந்த தென்பதற்கு 1939ஆம் ஆண்டு மே திங்களில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் நோய்வாய்பட்டு படுக்கையிலிருக்கையிலுங்கூட கட்சியின் ஆக்க வேலையைச் செய்யும்படி தமிழரைக் கேட்டுக்கொண்டு அறிக்கையொன்று வெளியிட்டதே போதுமெனக் கருதுகின்றோம். தமிழர்கள் வாழ்வே தமது வாழ்வு, தமிழர்களின் உயர்வே தமது உயர்வு என்று எண்ணி உயிர் வாழ்ந்துவந்த நமது செல்வத்திற்குப் பெரியார் கூறுவதுபோல் பாழும் உத்தியோகம் அவரது உயிருக்கே உலையாய் விட்டதுபோலும். அவரது மறைவு நீதிக்கட்சிக்குப் பார்ப்பனரல்லாதார் சமுகத்திற்கு எவ்வளவு பெரிய நஷ்டம், ஈடுசெய்யமுடியாத நஷ்டம் என்பது பெரியார் துயரிலிருந்து நன்கு விளங்கும். இத்தகைய ஒப்பும் உயர்வுமற்ற தலைவரைப் பிரிந்து பரிதவிக்கும் கோடிக்கணக்கான தமிழ்மக்களுக்கு நாம் என்ன சொல்லி ஆறுதலளிப்போம் என்பது தோன்றவில்லை. தோன்றலும் மறைதலும் உலக இயல்பே. ஆனால், நமது செல்வத்தின் மறைவு அதைப் போன்றதென்பதற்கில்லை. இத்தகைய மறைவு மிக அபூர்வம் என்றே சொல்வோம். விண்ணில் பறந்த விமானம் மறைந்தது; கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.
ஒருவேளை கடலில் வேண்டுமானால் அத்தகைய சம்பவங்கள் ஏதோ ஓரோர் சமயத்தில் நடந்திருக்கின்றனவே அன்றி விண்ணில் ஒரு போதும் நடந்ததாகக் காணோம். ஆகவே, இத்தகைய ஆபத்து நமது செல்வத்தைத் தாங்கிச் சென்ற விமானத்திற்கா தேடி வரவேண்டும்? ஹனிபாலுக்கு வந்த விபத்து பெரிய மாயமாகவே இருக்கிறது. இன்றுடன் நாட்கள் 17 ஆகியும் இன்னும் அதன் விபத்தைக் குறித்து ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
ராஜாங்க சபையில் கேட்ட கேள்விகளுக்கு (முழு விபரம் மற்றோர் பத்தியில் வெளிவருகிறது) இந்திய மத்திய சர்க்கார் போக்கு வரவு இலாகா காரியதரிசி, சர். பன்னீர்செல்வம் ஏறிச்சென்ற ஹனிபால் என்னும் விமான விபத்து சம்பந்தமாய் விசாரணை முறையைப் பற்றியும் அவ்விசாரணைக் கமிட்டிக்கு யார் யாரை நியமிப்பதென்பதைக் குறித்தும் இந்திய சர்க்காருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். விசாரணை நடத்தி விடுவதினாலே தங்கள் பொறுப்பு நீங்கி விட்டதென சர்க்கார் கருதிவிடாமல் தமிழர் செல்வத்தை, பொக்கிஷத்தை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்குப் போதிய பரிகாரம் தேடித் தரவேண்டியது அவர்களது நீங்காக் கடமை என்பதையும் நினைவுறுத்துகிறோம். பார்ப்பனரல்லாத இப்பெருஞ் சமுகம் இந்நிலையிலிருப்பதற்குக் காரணம், தங்கள் தலைவர்களைக் குறித்த உண்மை அபிமானமில்லாததேயாகும் என்று சொன்னால் பலருக்குக்குக் கோபம் வரலாம். ஆனால், அவர்களை நாம் ஒன்று கேட்க ஆசைப்படுகிறோம்.
அதாவது, டாக்டர் நாயர் பெருமான் லண்டனில் மாண்டகாலையிலும், தியாகராயர் பெருமான் உயிர் துறந்த போதிலும், பனகால் அரசர் மறைந்த சமயத்திலும் அலறின மக்கள், துடித்த மக்கள் அவர்களைப் பின்பற்றி யாது செய்தார்கள் என்று கேட்கிறோம்? அவர்கள் செய்த தியாகங்களின் பரிசை, பலனைப் பெற்றவர்கள் தங்கள் தங்கள் சுற்றமெங்கே? வீடுவாசலெங்கே? நிலபுலம் எங்கே? என்று திரிகின்றனரே யல்லாது, அவர்களின் தியாகங்களைப் பின்பற்றி எத்தனைபேர் சுயநலமற்று பொதுநலமே தங்கள் நலமென்றிருக்கின்றனர்? என்று கேட்கிறோம். அவர்களைப் பின்பற்றியிருந்தார் நமது செல்வம்; இன்று அவரும் மறைந்து விட்டார்.
பெரியாரும் பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது காரணம்...... பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது தமிழர்களின் நிலையைப் பொறுத்தது.... இவருக்குப் பதில் யார் என்றே (மனம்) திகைக்கிறது என்று அலறுகிறார். பெரியாரின் அலறலுக்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று அபயம் தர எத்தனை பேர் முன்வருகிறார்கள் என்று கேட்கிறோம்.
ஆகவே, நமது செல்வம் மறைவைக் குறித்து உண்மையிலே தமிழர்கள் துயருறுகிறார்கள் என்றால் செல்வம் எதற்காக அல்லும் பகலும் பாடுபட்டாரோ, எந்த சமுகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தாரோ அதே கொள்கைக்காக ஒவ்வொருவரும் உழைக்க, பாடுபட முன்வர வேண்டும். அவர் மொழிந்த ஒவ்வொரு சொல்லும் எதிர்காலத்தில் தமிழர் ஆட்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும். அவரது உருவச்சிலை இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்று ஒவ்வொரு தமிழனும் எண்ணவேண்டும். ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் செல்வத்தின் திருஉருவப்படமிருத்தல் வேண்டும். இப்படியாக 2 கோடி தமிழர்களும் செல்வமாகவே விளங்கிவிட்டால், செல்வத்தைப் பறிகொடுத்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு இதைவிட மனப்பூரிப்பு, மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியுமென்று கேட்கிறோம். 2 கோடி தமிழர்களும் நமது செல்வத்தின் மறைவைக் குறித்து சித்தங்கலங்கி பித்தங்கொண்டிருப்பது உண்மையானால் இதைச் செய்ய முன்வருவார்களா? என்று கேட்கிறோம்.
தோன்றுக செல்வம் எங்கும்!
தோன்றுக செல்வம் என்றும்!
தோன்றுக செல்வம் மாநிலத்தில்!
குடி அரசு - தலையங்கம் - 17.03.1940

ஞாயிறு, 20 மே, 2012



அயோத்திதாசர்







ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைச் சங்கநாதம் இவர்.சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழன்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.


பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்..இரட்டைமலை சீனிவாசன் இவரின் நெருங்கிய உறவினர் ஆவார்.


1891 டிசம் பரில் திராவிட மகா ஜனசபையின் சார்பாக முதல் மாநாடு நடைபெற்றது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் ஆவர்.
கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடையை நீக்க வேண்டும்; கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும்; முன்சீப், மணியக்காரர் வேலை தரப்பட வேண்டும்; இந்துக்கள் பணி புரியும் நீதிமன்றங்களில் செல்வதற்கான தடையையும், பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவதற்கான சமூகத் தடைகளையும் நீக்க வேண்டும்; பறையர் என்பதைக் கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருவதோ கூடாது என்று அம்மாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதில் அயோத்திதாசர் முக்கிய மாகக் கவனம் செலுத்தி னார். கல்விதானே உண்மையான கண் - அதனை இந்துத்துவ வருணாசிரம சமுதாயம் அவித்து விட்டதல்லவா?
அவருக்குக் கிடைத்த ஒரு பவுத்த சிந்தனையாளர்தான் - அமெரிக்க இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்தவர் கர்னல் ஆல்காட்!
1894 இல் சென்னையில் தீண்டப்படாத மக்களுக்காக தனிப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அவருக்கு அயோத்திதாசர் அளித்த விண்ணப்பம் முக்கியமானது. தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகளைத் திறக்க வேண்டிய விருப்பத்தை அதில் வெளியிட்டிருந்தார்.
அந்த விண்ணப்பத்தில் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பஞ்சமர்கள்தான் ஆரம்ப காலத்தில் திராவிடர்களென அழைக்கப்பட்டதை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட பகை உணர்வுகளை எல்லாம் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரியராவது திராவிடராவது என்று பேசும் அறிவு ஜீவிகள் முதலில் அயோத்திதாசரைப் படிக்கட்டும்.அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.
- மயிலாடன்

வியாழன், 17 மே, 2012


வீரத் தமிழன்னை  டாக்டர் தருமாம்பாள்







13.11.1938 தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாதா பெருநாள்; ஆம் அன்று வரை ஈ.வெ.ரா. என்று தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தலைவருக் குப் பெரியார் என்ற பட்டம் அளித்துப் பெருமை பெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்ற பொன் னாள் அது!

தோழியர் மீனாம்பாள் சிவராசு அவர்கள் தமிழ்க்கொடி உயர்த்திட, பண்டித நாராயணி அம்மையார் மாநாட்டினைத் திறந்து வைக்க, வா.பா. தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்ற, மறைமலை அடிகளாரின், மகள், பா. நீலாம்பிக்கை அம்மையார் மாநாட்டிற்குத் தலைமை யேற்க, மூவாலூர் இராமா மிர்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், ராணி அண்ணா புடைசூழ அந்தப் பட்டம் வழங்கப் பெறலாயிற்று.

அந்த மாநாட்டு உரையில் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபடப் பெண் களைத் தூண்டினார் என்ற அடிப்படையில் தான் (1938) இந்தி எதிர்ப்புப் போரில் சிறைத் தண்டனையும் பெற் றார்.

முதல் நாள் பெண்கள் மாநாடு; மறு நாள் மங்கையர் போராட்டத்துக்கு அணி வகுப்பு!

மொழிப் போரில் முதன் முதலில் பெண்கள் சிறைக் கோட்டம் நுழைந்தது அப்பொழுதுதான்.

டாக்டர் தருமாம்பாள், தலைமையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் பாலசுந்தரம், மலர் முகத்தம்மையார், சீதம்மாள் (டாக்டர் தருமாம்பாள் மருமகள், மூன்று வயதுடைய மங்கையர்க்கரசி, ஒரு வய துடைய நச்சியார்க்கினியன், (குழந்தை) ஆகியோர் சிறைப்பட்டனர்.

காவல்துறை அதிகாரி (தாய்மார்களைப் பார்த்து) நீங்கள் இவ்விடத்தைவிட்டு அகலுங்கள்.

தாய்மார்கள்: முடியாது; இந்தி ஒழியும் வரை இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம்.

காவல்துறை அதிகாரி: அப்படியானால் சிறைச் சாலைதான்.

தாய்மார்கள்: அழைக்கட்டுமே. அதற்குத்தானே காத்துக் கிடக்கிறோம்.

(கைது செய்யப்பட்டு சிறைக் கோட்டம் சென்றனர் - 6 வாரம் கடுங்காவல் தண்டனை)

டாக்டர் தருமாம்பாள் சித்த வைத்தியத்தில் தேர்ந்த மருத்துவர்; தஞ்சை கரந்தை யில் பிறந்தவர் (1890) இவரது பொது நலத் தொண்டைப் பாராட்டி வீரத் தமிழன்னை என்ற பட்டம் ஒரு விழாவில் டாக்டர் அ. சிதம்பரநாதன் அவர்களால் வழங்கப்பட்டது (1951).

சிறந்த சீர்திருத்தவாதி, பெரியாளையத்தில் வேப் பந்தழை உடுத்தி பெண்கள் நிர்வாணமாகக் கோயிலை வலம் வருவதைத் தடுக்க நேரில் சென்று பிரச்சாரம் செய்தவர்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர் களுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர். சென்னை மாணவர் மன்றத் தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 9 ஆண்டுகள் தாங்கிப் பிடித்தவர்;சென்னை - தங்க சாலையை தருமாம்பாள் சாலை என்று மாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்.

வாழ்க வீரத் தமிழன்னை!