புலவர் கோ.இமயவரம்பன்
1. எங்கள் அம்மா எங்கே?
எவரும் சொல்ல மாட்டாரோ?
அங்கையில் உணவை அளித்து
ஆயிரம் முத்தங்கள் அளிக்கும்
(எங்கள் அம்மா)
2. அம்மா அம்மா என்றுமே
யாரை அழைப்போம் இனிமேலே
விம்மி விம்மி அழுகின்றோம்
வேதனைக் குரல் கேளீரோ!
(எங்கள் அம்மா)
3. அழகுஅருமைப் பாப்புடனே
அருட்செல்வி அமலா மற்றோரும்
அழுது கொண்டே இருக்கின்றோம்
அம்மாவைக் காட்ட மாட்டீரோ!
(எங்கள் அம்மா)
4. சின்னப் பாப்பா வைக்க மொடு
சேர்ந்து வளரும் வளர்மதியும்
சின்னக் கைகளை அசைத்தாட்டிச்
சிரித்து ஆடுதல் கண்டிடவே!
(எங்கள் அம்மா)
5. தலைசீவிச் சட்டைகள் மாட்டிடுவார்
தன் கையால் உணவு ஊட்டிடுவார்
விலைமதிப் பில்லாக் கல்விக்கே
வேனில் எங்களை அனுப்பிடுவார்
(எங்கள் அம்மா)
6. திக்கற்ற குழந்தைகள் எதிர்காலம்
செம்மையாய் அமைய வேண்டுமென்றே
தக்கதோர் ஏற்பாடு செய்துவிட்டுத்
தாயே எங்குப் போய் மறைந்தீரோ!
(எங்கள் அம்மா)
7. எங்கள் வாழ்வு வளம் பெறவே
எந்நாளும் உழைத்த எங்கள்
மங்காத ஒளிவிளக்கு எங்கே
மறைந்தது ஏனோ கூறீரோ!
(எங்கள் அம்மா)
8. அய்யா அம்மா வழியினிலே
அனைவரும் நாங்கள் தொடர்வோமே
கைகளைக் குவித்தே தொழுகின்றோம்
கண்ணீரைக் காணிக்கை யாக்குகிறோம்!
(எங்கள் அம்மா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக