-தந்தை பெரியார்
மறைந்தாயோ
செல்வமே! துறந்தாயோ மானிலத்தை! என்று 2 கோடி தமிழர்கள் அலறித் துடிக்கவும், காலஞ்சென்ற
பன்னீர்செல்வமே காலஞ்சென்று விட்டாயா? என்று பெரியார் புலம்பவும் விட்டுச் சென்றார்.
நமது செல்வம் என்று எண்ணவேண்டியிருக்கிறது.
கவர்னரின்
அனுதாபச் செய்தியிலிருந்து: மார்ச் மாதம் 1ஆம் நாள் அதிகாலை கராச்சியை விட்டு நமது
செல்வத்தைத் தாங்கிச் சென்ற ஹனிபால் எங்கே? எங்கே? என்று மக்கள் துடிக்கின்றனர். ஹனிபால்
மறைந்த மாயமென்ன? செல்வத்திற்கு உற்ற கதி என்ன? என்று மக்கள் துடித்தனர். கவர்னர் அறிக்கை
ஹனிபால் கடலுள் மூழ்கியிருக்க வேண்டும். நமது செல்வம் உயிர் துறந்திருக்க வேண்டும்
எனக் கருத வேண்டியிருக்கிறதென முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி நமது அருஞ்செல்வத்தைக்
குறித்து எண்ண, என்ன இடமிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. இச்செய்தி ஏற்கனவே மார்ச்
2ஆம் நாள் முதல் சித்தம் கலங்கித் தவிக்கும் தமிழர்களைப் பித்தங்கொள்ளச் செய்யும் என்பதில்
சந்தேகமில்லை. மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைந்தகாலையில் எல்லாம் பதறாத நமது
பெரியார், செல்வம் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டதும் கலங்கினார் என்றால், மற்றவர்களைக்
குறித்து நாம் என்ன சொல்ல வேண்டுமென்று கேட்கிறோம்.
இவ்வளவு
பெரிய கலக்கத்தை, துயரத்தை அவரது மறைவு உண்டுபண்ணியதேன் என்றால் அவர் தமிழர்கள்பால்
காட்டிய அன்பும் தமிழர்கள் அவர்பால் கொண்ட நம்பிக்கையும் என்றே சொல்வோம்.
தந்தை
தனது தனயனைப் பிரிந்தகாலையிலும், தனயன் தந்தையைப் பிரிந்தகாலையிலும் கணவன் மனைவியைப்
பிரிந்தகாலையிலும், மனைவி கணவனைப் பிரிந்தகாலையிலும் வருந்துவதின் காரணம் அன்பு, காதல்
என்று சொன்னாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் எதிர்பார்த்த உதவியென்பதே நமது அபிப்பிராயம்.
ஆனால், இன்று, நமது செல்வத்தின் மறைவைக் குறித்து 2 கோடி தமிழர்களும் அலறித் துடிப்பதின்
காரணம் அன்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று நாம் எந்த மலையுச்சியிலிருந்தும்
சொல்வோம். பெரியாரிடம் அவருக்கிருந்த அன்பு எவ்வளவு உண்மையான என்பதை, அன்று அதாவது
சென்ற பிப்ரவரி திங்கள் 26ஆம் நாள் மாலை சென்ட்ரல் ஸ்டேஷனை விட்டு நமது செல்வத்தை ஏற்றி
சென்ற ரயில்வண்டி புறப்பட இருந்த சமயத்தில் இருவர்களுடைய கண்களின் கலக்கத்தையும் உதடுகளின்
அசைவையும் கண்ட எவரும் நன்கு அறிவார்கள். அக்காட்சி ஒன்றேபோதும் செல்வம் தமிழர்கள்
நலனில், தமிழர்கள் வாழ்வில் கொண்டுள்ள பற்றை விளக்க என்று நம்புகிறோம்.
வெண்ணெய்
திரண்டுவருகையில் தாழி உடைந்தாற்போல், அரசியல் எதிரிகளால் நையாண்டி செய்யப்பட்டு வந்த
நீதிக்கட்சி உருண்டு திரண்டு உருவாகி வருகையில் செல்வம் மறைந்தார் என்ற செய்தி உண்மையாகவே
2 கோடி தமிழர்களும் தங்கள் தலையில் இடிவிழுந்ததென எண்ணுவர் என்பதில் சந்தேகமில்லை.
நீதிக்கட்சியே
அவரது உயிராயிருந்த தென்பதற்கு 1939ஆம் ஆண்டு மே திங்களில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில்
நோய்வாய்பட்டு படுக்கையிலிருக்கையிலுங்கூட கட்சியின் ஆக்க வேலையைச் செய்யும்படி தமிழரைக்
கேட்டுக்கொண்டு அறிக்கையொன்று வெளியிட்டதே போதுமெனக் கருதுகின்றோம். தமிழர்கள் வாழ்வே
தமது வாழ்வு, தமிழர்களின் உயர்வே தமது உயர்வு என்று எண்ணி உயிர் வாழ்ந்துவந்த நமது
செல்வத்திற்குப் பெரியார் கூறுவதுபோல் பாழும் உத்தியோகம் அவரது உயிருக்கே உலையாய் விட்டதுபோலும்.
அவரது மறைவு நீதிக்கட்சிக்குப் பார்ப்பனரல்லாதார் சமுகத்திற்கு எவ்வளவு பெரிய நஷ்டம்,
ஈடுசெய்யமுடியாத நஷ்டம் என்பது பெரியார் துயரிலிருந்து நன்கு விளங்கும். இத்தகைய ஒப்பும்
உயர்வுமற்ற தலைவரைப் பிரிந்து பரிதவிக்கும் கோடிக்கணக்கான தமிழ்மக்களுக்கு நாம் என்ன
சொல்லி ஆறுதலளிப்போம் என்பது தோன்றவில்லை. தோன்றலும் மறைதலும் உலக இயல்பே. ஆனால், நமது
செல்வத்தின் மறைவு அதைப் போன்றதென்பதற்கில்லை. இத்தகைய மறைவு மிக அபூர்வம் என்றே சொல்வோம்.
விண்ணில் பறந்த விமானம் மறைந்தது; கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாம் கண்டதுமில்லை,
கேட்டதுமில்லை.
ஒருவேளை
கடலில் வேண்டுமானால் அத்தகைய சம்பவங்கள் ஏதோ ஓரோர் சமயத்தில் நடந்திருக்கின்றனவே அன்றி
விண்ணில் ஒரு போதும் நடந்ததாகக் காணோம். ஆகவே, இத்தகைய ஆபத்து நமது செல்வத்தைத் தாங்கிச்
சென்ற விமானத்திற்கா தேடி வரவேண்டும்? ஹனிபாலுக்கு வந்த விபத்து பெரிய மாயமாகவே இருக்கிறது.
இன்றுடன் நாட்கள் 17 ஆகியும் இன்னும் அதன் விபத்தைக் குறித்து ஒரு செய்தியும் நமக்குக்
கிடைக்கவில்லை.
ராஜாங்க
சபையில் கேட்ட கேள்விகளுக்கு (முழு விபரம் மற்றோர் பத்தியில் வெளிவருகிறது) இந்திய
மத்திய சர்க்கார் போக்கு வரவு இலாகா காரியதரிசி, சர். பன்னீர்செல்வம் ஏறிச்சென்ற ஹனிபால்
என்னும் விமான விபத்து சம்பந்தமாய் விசாரணை முறையைப் பற்றியும் அவ்விசாரணைக் கமிட்டிக்கு
யார் யாரை நியமிப்பதென்பதைக் குறித்தும் இந்திய சர்க்காருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும்
கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். விசாரணை நடத்தி
விடுவதினாலே தங்கள் பொறுப்பு நீங்கி விட்டதென சர்க்கார் கருதிவிடாமல் தமிழர் செல்வத்தை,
பொக்கிஷத்தை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்குப் போதிய பரிகாரம் தேடித் தரவேண்டியது
அவர்களது நீங்காக் கடமை என்பதையும் நினைவுறுத்துகிறோம். பார்ப்பனரல்லாத இப்பெருஞ் சமுகம்
இந்நிலையிலிருப்பதற்குக் காரணம், தங்கள் தலைவர்களைக் குறித்த உண்மை அபிமானமில்லாததேயாகும்
என்று சொன்னால் பலருக்குக்குக் கோபம் வரலாம். ஆனால், அவர்களை நாம் ஒன்று கேட்க ஆசைப்படுகிறோம்.
அதாவது,
டாக்டர் நாயர் பெருமான் லண்டனில் மாண்டகாலையிலும், தியாகராயர் பெருமான் உயிர் துறந்த
போதிலும், பனகால் அரசர் மறைந்த சமயத்திலும் அலறின மக்கள், துடித்த மக்கள் அவர்களைப்
பின்பற்றி யாது செய்தார்கள் என்று கேட்கிறோம்? அவர்கள் செய்த தியாகங்களின் பரிசை, பலனைப்
பெற்றவர்கள் தங்கள் தங்கள் சுற்றமெங்கே? வீடுவாசலெங்கே? நிலபுலம் எங்கே? என்று திரிகின்றனரே
யல்லாது, அவர்களின் தியாகங்களைப் பின்பற்றி எத்தனைபேர் சுயநலமற்று பொதுநலமே தங்கள்
நலமென்றிருக்கின்றனர்? என்று கேட்கிறோம். அவர்களைப் பின்பற்றியிருந்தார் நமது செல்வம்;
இன்று அவரும் மறைந்து விட்டார்.
பெரியாரும்
பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும்
தமிழர் நிலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது காரணம்...... பன்னீர்செல்வத்தின்
மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது தமிழர்களின் நிலையைப் பொறுத்தது.... இவருக்குப் பதில்
யார் என்றே (மனம்) திகைக்கிறது என்று அலறுகிறார். பெரியாரின் அலறலுக்கு இதோ நாங்கள்
இருக்கிறோம் என்று அபயம் தர எத்தனை பேர் முன்வருகிறார்கள் என்று கேட்கிறோம்.
ஆகவே,
நமது செல்வம் மறைவைக் குறித்து உண்மையிலே தமிழர்கள் துயருறுகிறார்கள் என்றால் செல்வம்
எதற்காக அல்லும் பகலும் பாடுபட்டாரோ, எந்த சமுகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தாரோ
அதே கொள்கைக்காக ஒவ்வொருவரும் உழைக்க, பாடுபட முன்வர வேண்டும். அவர் மொழிந்த ஒவ்வொரு
சொல்லும் எதிர்காலத்தில் தமிழர் ஆட்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.
அவரது உருவச்சிலை இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்று ஒவ்வொரு தமிழனும் எண்ணவேண்டும். ஒவ்வொரு
தமிழர் வீட்டிலும் செல்வத்தின் திருஉருவப்படமிருத்தல் வேண்டும். இப்படியாக 2 கோடி தமிழர்களும்
செல்வமாகவே விளங்கிவிட்டால், செல்வத்தைப் பறிகொடுத்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு
இதைவிட மனப்பூரிப்பு, மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியுமென்று கேட்கிறோம். 2 கோடி
தமிழர்களும் நமது செல்வத்தின் மறைவைக் குறித்து சித்தங்கலங்கி பித்தங்கொண்டிருப்பது
உண்மையானால் இதைச் செய்ய முன்வருவார்களா? என்று கேட்கிறோம்.
தோன்றுக
செல்வம் எங்கும்!
தோன்றுக
செல்வம் என்றும்!
தோன்றுக
செல்வம் மாநிலத்தில்!
குடி அரசு - தலையங்கம்
- 17.03.1940
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக