சனி, 12 மே, 2012






சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பார்_அட்_லா அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1940).
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்-தில் படித்து, பார்_அட்_லா படித்து வந்தார் என்றால், அது என்ன சாதாரணமா?


சென்னை வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே தஞ்சையில் வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். 1912 ம் ஆண்டில் பிராமணர்களே எல்லாத்துறைகளிலும் முதலிடம் வகித்து வந்தனர். பிராமணர்களின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாக ஓங்கியிருந்தது. வர்ணாசிரமக் கொள்கையை பிராமணர்கள் தீவிரமாக கடைப்பிடித்தனர். இந்த நிலையை மாற்ற பிராமணரல்லாதார் சிலர் சிந்திக்கத்தொடங்கினர். அன்றைய காங்கிரசிலும் பிராமணர்களின் கையே ஓங்கியிருந்தது. திராவிட இனத்தாரின் தனிச்சிறப்பை உணர்ந்த பிராமணரல்லாதார் ஒன்று கூடி தென்னிந்திய மக்கள் பேரவையைத் தோற்றுவித்தனர். பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாயிற்று. இந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பின்னாளில் நீதிக்கட்சியாக அனைவராலும் அழைக்கலாயிற்று.


நீதிக்கட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களுக்கு வழிகோலியது. வகுப்புவாரி பிரதிநித்துவம் ஏற்பட முக்கிய பங்காற்றியது.
எங்கு பார்த்தாலும், பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததைக் கண்ட பன்னீர்செல்வம் அவர்கள் நீதிக்கட்சியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். பிறகு தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார்.


காங்கிரசுக் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பொறுக்கமுடியாமல் 1926-ம் ஆண்டு ஈ வெ ரா பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியாரின் நெருங்கிய நண்பர் எஸ் இராமநாதன் அதே ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தைத்[2] தொடங்கியிருந்தார். சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதை தன் நோக்கமாகக் கொண்டிருந்த இவ்வியக்கத்தின் தலைவர் பெரியாரும், செயலாளர் எஸ் இராமநாதனும் பொறுப்பேற்றிருந்தனர். 1926 ல் நடந்த மதுரை நீதிக்கட்சிமாநாடுகளிலும் பெரியார் கலந்து கொண்டார் ஆயினும் (நீதிக்கட்சியின் போக்கு பிடிக்காத்தால்) பெரியார் நீதிக்கட்சியில் சேரவில்லை. நீதிக்கட்சியிலிருந்து பலர் சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டனர். சிலர் நீதிக்கட்சியை அரசியல் கட்சியாகவும் சுயமரியாதை இயக்கத்தை சமூக இயக்கமாக நினைத்து இரண்டிலும் ஈடுபாடு கொண்டனர். பன்னீர் செல்வம் தன்னை தீவிரமாக சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கத்தின் தீவிர நாத்திக (கடவுள் மறுப்பு) கொள்கைக்கு உட்னபடாதவராயினும் பிராமண எதிர்ப்பு , சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மதிப்பளித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.


1929 இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலை-வராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டுக்கு (18.2.1929) தலைமை வகித்து சங்கநாதம் செய்தார் பன்னீர்செல்வம்.
தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக இருமுறை இருந்து அரும்பணியாற்றினார்.அவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் திருவையாற்றில் பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து தமிழில் புலவர் படிப்புக்கும் வழி செய்தார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசாமடம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் இருந்த விடுதி-களைச் சீர்திருத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்களும் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த இரு விடுதிகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்கள் தங்கிப் படித்து கல்வி பெறும் நல்வாய்ப்பினைக் கொடுத்தது.


நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். தஞ்சாவூர் நகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.நீதிக்கட்சி தோற்று பெரிய நெருக்கடிக்கு ஆளானபோது, கட்சிக்குப் புதிய தலைவர் தேவை அதுவும் பெரியார்-தான் அதற்குத் தகுதியானவர் என்று கூறி 28.11.1938 இல் கூடிய நீதிக்கட்சிக் கூட்டத்தில் முத்தையா செட்டியார் முன்மொழிய, அதனை வழி-மொழிந்-தவர் செல்வம் ஆவார்.


சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுக்குத் (29.12.1938) தலைமை வகிக்க-வேண்டிய பெரியார் சிறையில் இருந்ததால், பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவருக்கு அணிவிக்கவந்த மாலையைக் கையில் வாங்கி, என் தோளுக்கு வந்த மாலையை தலைவர் பெரியார் தாளுக்குச் சூட்டுகிறேன்! என்று கூறி, அங்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்துக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
இறுதிவரை தன்தலைவரை(பெரியாரை) எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இயக்கப்பணியாற்றினார்.
இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சருக்கு ஆலோசனைக் குழு உறுப்பினராக செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்ற அனிபா விமானம் ஓமான் கடலில் விழுந்தது. அரிய செல்வத்தை நாடு பறிகொடுத்தது! (வயது 52).அவர் மறைவையொட்டி காலம் சென்ற பன்னீர்செல்வமே என்று தந்தை பெரியார் குடிஅரசில் எழுதிய அந்தக் கட்டுரையை இன்று படித்தாலும் கண்ணீர், வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் _ அது ஒரு சகா இரங்கல் இலக்கியம். என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று தான் கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20-ஆவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டிடுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணும் தோறும் நெஞ்சம் பகீரென்கிறது. இவருக்குப் பதில் யார் என்றே திகைக்கிறது . . . என்று பெரியார் தன்னுடைய குடியரசு இதழில் தலையங்கம் எழுதியிருப்பது சுயமரியாதை இயக்கத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக